

குஜராத், இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் முதல்-மந்திரி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையில் அங்கு இப்போது பாரதிய ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
தேர்தலுக்கு முன்பு முன்னாள் முதல்-மந்திரி பிரேம்குமார் துமால் பாரதிய ஜனதா முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்த நிலையிலும் பிரேம்குமார் துமால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இதனால் முதல்-மந்திரி ஆக முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டு விட்டது. எனவே, வேறு ஒரு நபரை முதல்-மந்திரியாக தேர்வு செய்வதற்கு பாரதிய ஜனதா தயாராகி வருகிறது.
முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக மேலிட பார்வையாளர்களாக மத்திய மந்திரிகள் நிர்மலா சீத்தாராமன், நரேந்திர தோமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று தலைநகரம் சிம்லாவுக்கு சென்று முதல்-மந்திரி தேர்வு குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.
முதல்-மந்திரி பதவிக்கு மத்திய மந்திரி ஜே.பி. நட்டா, மாநிலத்தில் 5 தடவை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற ஜெயராம் தாகூர் ஆகியோர் பெயர் முன்னணியில் உள்ளது.
இது தவிர, முன்னாள் பாரதிய ஜனதா தலைவர் சுரேஷ் பரத்வாஜ், எம்.எல். ஏ.க்கள் மொகீந்தர்சிங், ராஜீவ் பின்டால், கிரீசன் கபூர் ஆகியோரும் முதல்-மந்திரி பதவிக்கு போட்டியாக உள்ளனர்.
தேர்தலில் தோற்று விட்டதால் நான் முதல்-மந்திரி பதவிக்கு போட்டியிடவில்லை என்று துமால் ஏற்கனவே அறிவித்து விட்டார்.
ஆனால், புதிய எம்.எல். ஏ.க்கள் பலர் துமாலைதான் முதல்-மந்திரியாக தேர்வு செய்ய வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக ஒரு எம்.எல்.ஏ. கூறும்போது, பிரேம்குமார் துமால் தோற்று விட்டாலும் அவரை மையமாக வைத்துதான் தேர்தலை சந்தித்தோம்.
அவர் பாரதிய ஜனதா கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே தேர்தல் நடந்தது. மக்கள் அவரை முதல்-மந்திரியாக தேர்வு செய்யும் எண்ணத்துடன் பாரதிய ஜனதாவுக்கு பெரும் வெற்றியை கொடுத்துள்ளனர்.
எனவே, அவரைதான் முதல்-மந்திரியாக நியமிக்க வேண்டும். அவரை கட்சி மேலிடம் புறக்கணித்தால் அது கட்சிக்கு எதிர் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று கூறினார்.
இதற்கிடையே பிரேம் குமார் துமால் வீட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பல எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடினார்கள். அவர்கள் பிரேம்குமார் துமாலிடம் முதல்-மந்திரி பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இது சம்பந்தமாக அவர்கள் கூறும் போது, மாநில பாரதிய ஜனதா கட்சியில் பிரேம்குமார் துமாலுக்கு இணையான தலைவர்கள் யாரும் இல்லை. அவர் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். நிர்வாக திறமையில் முதிர்ச்சி அடைந்தவர்.
எனவே, அவரைத்தான் முதல்-மந்திரியாக தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.
அவர்களில் பல எம்.எல். ஏ.க்கள் துமாலுக்காக தங்கள் தொகுதியை விட்டுத்தர தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.