

அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுக்கு பிறகு கட்சிப்பணியில் தீவிரமாக ஈடுபடப்போவதாகவும் வரும் 5-ந் தேதி அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்திற்கு செல்லப் போவதாகவும் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஆட்சியும், கட்சியும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படுவதாக கூறினார்.
இது குறித்து ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வும் தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. தொலைபேசியில் அளித்த பேட்டி விபரம் வருமாறு:-
அமைச்சர் ஜெயக்குமார் கூறுவதை எப்போதும் நாங்கள் ஏற்றதில்லை. அவர் சொல்வது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். இந்த கருத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருந்தால் அதற்கு நாங்கள் உரிய பதில் அளிப்போம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், தற்போது உள்ள அமைச்சர்களையும் தேர்ந்து எடுத்தது பொதுச் செயலாளர் சசிகலாதான்.
எனவே அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மட்டுமே கட்சியில் முழு அதிகாரம் செலுத்த முடியும். அவரது வழிகாட்டுதலின்படியே கட்சியும், ஆட்சியும் செயல்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அவர் கட்சியில் செயல்படுவதை யாரும் தடுக்க முடியாது.