தினகரன் அறிவித்த கட்சி பதவியை ஏற்கிறேன்: எம்.எல்.ஏ. கதிர்காமு பேட்டி

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அளித்த பதவியை நான் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்கிறேன் என்று பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ. கதிர்காமு கூறினார்.
தினகரன் அறிவித்த கட்சி பதவியை ஏற்கிறேன்: எம்.எல்.ஏ. கதிர்காமு பேட்டி
Published on

பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கதிர்காமு. இவர் அ.தி.மு.க. பிளவுபட்டது முதல் தினகரன் ஆதரவாளராக உள்ளார். கடந்த வாரம் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கட்சியில் தனது ஆதுரவாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை அறிவித்தார். இதில் கதிர்காமுவுக்கு மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இது குறித்து தேனியில் நிருபர்களிடம் எம்.எல்.ஏ. கதிர்காமு தெரிவிக்கையில், தினகரன் அறிவித்த பதவி எனக்கு வேண்டாம். எனக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த எம்.எல்.ஏ. பதவியே போதும். இதைக் கொண்டு என் தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய உள்ளேன் என்றார்.

இதை தெரிவித்து 24 மணி நேரம்கூட ஆகாத நிலையில் அவர் தேனியில் நிருபர்களை மீண்டும் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அளித்த பதவியை நான் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய சொந்த காரணங்களுக்காக அந்த பணியை முதலில் ஏற்க மறுத்தேன். இது குறித்து செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து மக்கள், கட்சியினர் மத்தியில் தேவையில்லாத பல்வேறு கருத்துகள், குழப்பங்கள் ஏற்படும் என்பதை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

எனவே நான் இந்த பதவியை ஏற்பதில் எந்தவித தயக்கமும் இல்லை. டி.டி.வி. தினகரன், மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி நான் தொடர்ந்து செயல்படுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com