கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ.க்களுக்கு பண பேரம் எதுவும் நடக்கவில்லை: எம்.எல்.ஏ. கனகராஜ் மறுப்பு

கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ.க்களுக்கு பண பேரம் எதுவும் நடக்கவில்லை, தங்க கட்டிகளை நான் இதுவரை நேரில் பார்த்தது கிடையாது என்று எம்.எல்.ஏ. கனகராஜ் கூறி உள்ளார்.
கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ.க்களுக்கு பண பேரம் எதுவும் நடக்கவில்லை: எம்.எல்.ஏ. கனகராஜ் மறுப்பு
Published on

கோவை:

கூவத்தூர் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்த போது எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கில் பண பேரம் நடந்தது என மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேசியதாக வீடியோ காட்சிகள் ஆங்கில சேனலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவில் பேசியது நான் இல்லை என சரவணன் எம்.எல்.ஏ மறுத்துள்ளார்.

இதேபோல கோவை சூலூர் தொகுதியை சேர்ந்த கனகராஜ் எம்.எல்.ஏ.வும் கூவத்தூரில் தங்கியிருந்த போது சிலருக்கு நகை, பணம் கொடுத்தனர் என கூறியதாக மற்றொரு வீடியோவும் அந்த சேனலில் வெளியானது. இதனை கனகராஜ் எம்.எல்.ஏ. மறுத்தார்.

இதுகுறித்து கனகராஜ் எம்.எல்.ஏ. இன்று மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

கவர்னர் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்பதாலேயே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்தோம். அப்போது பண பேரம் எதுவும் நடத்தப்படவில்லை.

கூவத்தூரில் நாங்கள் தங்கியிருந்த போது சசிகலா எங்களுக்கு அறிவுரை கூறினார். நான் ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருந்தாலும் கூட நீங்கள் ஒற்றுமையாக இருந்து அம்மாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி தொடர செய்ய வேண்டும், அது தான் அம்மாவுக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன் என சசிகலா எங்களுக்கு அறிவுரை கூறினார். அப்போது அவரது அணிக்கு ஆதரவாக இருப்பதற்கு பணம் தருவதாகவோ, தங்கம் தருவதாகவோ யாரும் கூறவில்லை.

அதேநேரம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இருந்தும் எங்களுக்கு அழைப்பு வந்தது. அவரது அணியிலும் எனது நண்பர்கள் இருந்தனர். அவர்களது அழைப்பை ஏற்று 11 பேர் மட்டும் தான் சென்றனர். அம்மா தந்த இந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டும், ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது என்பதற்காக நான் அங்கு செல்லவில்லை.

தங்க கட்டிகளை நான் இதுவரை நேரில் பார்த்தது கிடையாது. சினிமாவிலும், டி.வி.யிலும் தான் பார்த்திருக்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடம் இருந்தும் எங்களுக்கு எந்த பண பேரமும் பேசவில்லை. ஆனால் ஆங்கில சேனலில் என்னை பற்றி அவதூறு பரப்பி உள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை சென்று முதல்-அமைச்சர், அமைச்சர்களிடம் பேசி சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுப்பேன். எனக்கு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட எம்.எல்.ஏ.க்களை தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் யாருடனும் அதிகமான பழக்கம் இல்லை. மதுரை சரவணன் எம்.எல்.ஏ. யார் என்றே எனக்கு தெரியாது.

என்னை பொறுத்தவரை அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அணிகள் இணையக்கூடாது என்பவர்கள் தான் பேச்சு வார்த்தை குழுவில் இருந்தனர்.

எனவே தான் அந்த குழுவை ஓ.பன்னீர்செல்வம் கலைத்திருக்கலாம் என கருதுகிறேன். விரைவிலேயே அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது.

டி.டி.வி. தினகரனை பொறுத்தவரை அவர் நல்ல மனிதர். அவர் எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்றோ, ஓ.பன்னீர் செல்வத்தை அழிக்க வேண்டும் என்றோ நினைப்பவர் அல்லா. அம்மா உருவாக்கிய இந்த ஆட்சியும், கட்சியும் நிலைக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்.

ஆர்.கே. நகரில் தேர்தல் நடந்திருந்தால் டி.டி.வி. தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார். அவரை எம்.எல்.ஏ.க்கள் மரியாதை நிமித்தமாக தான் சந்தித்து வருகிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை.

1½ கோடி தொண்டர்களும் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் தான் தலைமைக்கு வர முடியும். என்னை பொறுத்தவரை மக்கள் தான் எனக்கு எஜமான். ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டும் தான் நான் பயப்படுவேன். வேறு யாருக்கும் நான் எதற்காகவும் பயப்பட மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com