

சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சென்னையிலிருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு மாற்றும் மத்திய பா.ஜ.க., அரசின் முயற்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழின் தொன்மையையும், தனித்தன்மையையும் பாராட்டி, அங்கீகாரம் அளித்திடும் வகையில், நீண்ட காலமாக “தமிழுக்குச் செம்மொழி” அந்தஸ்து கோரி தமிழறிஞர்களும், மொழிப்பற்றாளர்களும் போராடி வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் மைசூரில் இருந்து போராடிப் பெற்று வந்த செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை, குறிப்பாக, தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தில் ஒரு துறையாக மாற்றுவதை, எக்காரணம் கொண்டும் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. மத்திய அரசின் இம்முயற்சியை தமிழ்கூறும் நல்லுலகம் நிச்சயம் மன்னிக்காது.+
தமிழ் மொழியை தேசிய மொழியாக்க, மத்திய ஆட்சி மொழியாக்க, சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க எவ்வித முயற்சியும் எடுக்காத மத்திய பா.ஜ.க., அரசு, இந்தியாவின் பல தேசிய இனமொழிகளைப் பின்னுக்குத் தள்ளி, சமஸ் கிருதத்தையும் இந்தியையும் மட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டு, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை ஒரு பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து, தமிழுக்கு இருக்கும் தன்னாட்சி அந்தஸ்தை சீர்குலைக்க முயற்சி செய்வது, தமிழக மக்களின் தூய உணர்வை கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, தமிழறிஞர்களின் நெஞ்சத்தில் ஈட்டி கொண்டு கீறும் செயலுமாகும்.
ஆகவே, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழத்திற்கு மாற்றும் முயற்சியை மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசும், அதற்கு மறைமுகமாக திரைமறைவில் உதவும் அ.தி.மு.க.,வின் ‘குதிரை பேர அரசும்’ செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தன்னாட்சித் தகுதியை சூறையாடும் போக்கில் செயல்படுவதை நிறுத்திக் கொண்டு, இந்நிறுவனம் முழுநேர இயக்குநர் மற்றும் முழு நிதியுதவியுடன், தமிழாராய்ச்சிப் பணிகளில் தன்னாட்சி அதிகாரத்துடன் தொடர்ந்து ஈடுபடுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், கிளர்ச்சி வழியைத் திறந்துவிட்டுத் தூண்டவேண்டாமென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.