திருவட்டார் அருகே மாயமான பள்ளி மாணவர்கள் 3 பேர் மீட்பு

திருவட்டார் அருகே மாயமான பள்ளி மாணவர்கள் 3 பேரை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மீட்பு
மீட்பு
Published on

திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள கண்ணனூர் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒருவரும், அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இவர்கள் 3 பேரும் பள்ளிக்கூடம் முடிந்து வந்த பிறகு ஒன்றாக பேசி பழகுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் இந்த மாணவர்கள் 3 பேரும் ஒன்றாக சந்தித்து விளையாடி உள்ளனர்.

அதன்பிறகு அந்த 3 மாணவர்களும் ஒரு மோட்டார் சைக்கிள் மூலம் வெளியில் சென்றனர். அதன்பிறகு அவர்கள் 3 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் திருவட்டார் போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து மாயமான மாணவர்களை தேடி வந்தனர். மாணவர்கள் மாயமானது அந்த பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மாணவர்கள் மாயமானது பற்றி போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 3 மாணவர்களில் ஒருவரின் உறவினர் வீட்டில் அந்த 3 மாணவர்களும் இருக்கும் தகவல் அவர்களின் பெற்றோருக்கு கிடைத்தது. அவர்கள் அந்த உறவினருக்கு போன் செய்து அந்த தகவலை உறுதிசெய்து கொண்டனர்.

மேலும் அந்த மாணவர்களை அழைத்து வருவதற்காக பெற்றோரும் அங்கு சென்று உள்ளனர். அந்த 3 மாணவர்களையும் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரும்படி போலீசாரும் அவர்களிடம் கூறி உள்ளனர். போலீசார் விசாரணையில் தான் அந்த 3 மாணவர்களும் எதற்காக வீட்டை விட்டு வெளியேறினார்கள் என்பது பற்றிய தெரிய வரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com