கேரளா: பத்மநாப சுவாமி கோயிலில் காணாமல் போன 12 வைரங்கள் கண்டெடுப்பு

கேரள மாநிலத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் காணாமல் போன நகைகளில் 12 வைரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று தெரிவித்துள்ளனர்.
கேரளா: பத்மநாப சுவாமி கோயிலில் காணாமல் போன 12 வைரங்கள் கண்டெடுப்பு
Published on

திருவனந்தபுரம்:

பழமையும், பெருமையும் நிறைந்த புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் அடங்கிய பொக்கிஷம் இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோயில் நகைகளை கணக்கெடுக்க சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பாளராக மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் மற்றும் முன்னாள் மத்திய தலைமை கணக்கு அதிகாரி பினோத் ராய் தலைமையிலான குழுவையும் சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ளது. பத்மநாப சுவாமி கோயில் நகைகள் பலமுறை திருடப்பட்டுள்ளதாக ஏற்கனவே இந்த குழு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், இரண்டாவது ரகசிய அறையில் வைக்கப்பட்டுள்ள நகைகளை கணக்கெடுப்பது தொடர்பாக இக்கோயிலை நிர்வகித்துவரும் திருவாங்கூர் சமாஸ்தனத்தை சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில் சிறப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

80 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைக்கள் காணாமல் போனதாகவும், இது மர்மமாக உள்ளதாகவும், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காணாமல் போனதாக கருதப்பட்டவைகளில் 12 வைரங்கள் கோயிலுக்குள்ளே கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் எனவும் சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com