

ஊட்டி:
நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா கலெக்டர் இன்னசென்ட்திவ்யா தலைமையில் நடைபெற்றது.
மதவழி சிறுபான்மையினர் என அங்கீகரிக்கப்பட்ட கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தினருக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சிறுபான்மையர் இனத்தை சேர்ந்த பள்ளி கல்லூரி மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில’ சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
உலமா மற்றும் இதரப்பணியாளர்களுக்கு நலவாரியம் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் நீலகிரி மாவட்டத்தில் 440 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு வழங்கப்படும் நலதிட்ட விவரங்கள் அவ்வட்டையிலேயே அச்சிடப்பட்டுள்ளது. அதாவது அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் இவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
இந்நாள் வரையிலும் 31 உறுப்பினர்களுக்கு ரூ.78,000 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசால் கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள தனிதிட்டமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக “டாம்கோ” நிறுவனம் மூலமாக கடனுதவிகள் நமது மாவட்டத்தில் இந்நாள் வரையில் 429 நபர்களுக்கு ரூ.203.78 லட்சம் அளவில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் மகபூப்பாட்ஷா மற்றும் சிறுபான்மையின நல சங்கத்தலைவர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.