குடியுரிமை போராட்டத்தில் கைது - 42 நாட்களாக ஜெயிலில் தவித்த 15 வயது சிறுவன்

உத்தரபிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்டதாக 15 வயது சிறுவன் 42 நாட்களாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளான்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

லக்னோ:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

இதில் சில இடங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனங்கள் உள்பட பொது சொத்துக்களை சேதப்படுத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

19-ந் தேதி லக்னோவில் நடைபெற்ற போராட்டத்திலும் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிறுன் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். சிறுவனிடம் உன் வயது என்ன? என்று போலீசார் கேட்டபோது 18 என கூறவும் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

இந்நிலையில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக கைதானவர்களிடம் இருந்து ரூ. 2 கோடியே 59 லட்சம் இழப்பீடு வசூலிக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது கைதான சிறுவனின் ஆதார் கார்டை பார்த்தபோது அச்சிறுவனுக்கு 15 வயது மட்டுமே ஆவது தெரியவந்தது.

இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 15 வயது சிறுவனை கைது செய்தால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில்தான் அடைத்திருக்க வேண்டும். ஆனால் இச்சிறுவனோ ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தான்.

இதையறிந்த சிறுவனின் பெற்றோர்கள் அவனது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை காட்டி சிறுவனை ஜாமீனில் எடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதன் பயனாக ஜனவரி 19-ந் தேதி சிறுவனுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனாலும் ரூ. 50 ஆயிரம் பிணைத்தொகை கட்டி ஜாமீனில் செல்லலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டதால் அவரால் உடனடியாக ஜாமீனில் வரமுடியவில்லை. இதனால் 42 நாள் ஜெயிலில் தவித்த சிறுவன் கடந்த 1-ந் தேதி தான் ஜாமீனில் வெளிவந்துள்ளான்.

கைதான சிறுவன் கடந்த 2 ஆண்டுகளாக லக்னோவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். அவர் கூறுகையில், சம்பவத்தன்று பரிவர்த்தன்சவுக் பகுதியில் அமைதியாக நடைபெற்ற போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. அப்போது நான் கடைக்குள் மறைந்து நின்றேன். வெளியே போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கல்வீச்சு நடைபெற்றது. நான் அந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த போராட்டத்தால் எனது நண்பருக்கு காலில் காயம் ஏற்பட்டது. வன்முறை நின்றதும் நான் என் நண்பரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com