மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்
Published on

சென்னை:

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அதில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக உதவி மருத்துவர்கள் இருமுறைகளில் தேர்வு செய்யப்படுகின்றனர். உதவி மருத்துவர் (பொது) பதவிக்கான தேர்வு போட்டித் தேர்வு மூலம் செய்யப்படுகிறது.

சிறப்பு உதவி மருத்துவர்களை பொறுத்தவரையில் தொடர்ந்து பல காலியிடங்கள் உள்ளதினாலும் அக்காலியிடங்களுக்கு உகந்த சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் அதிகம் முன் வராததாலும் மற்றும் அந்த காலியிடங்கள் உள்ளதால் அரசு மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்குவதில் உள்ள குறைகளைக் களைய வேண்டியதன் அவசியத்தைக் கருதியும் வாக்இன் முறை மூலம் அவர்கள் முதுநிலை மருத்துவப்படிப்பினில் பெற்ற மதிப்பெண்கள், நடைமுறையிலுள்ள இன சுழற்சி மற்றும் இட ஒதுக்கீடு விதிமுறைகளைப் பின்பற்றியே மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு உதவி மருத்துவர்களுக்கான வாக்இன் முறை தேர்வில் ஒவ்வொரு சிறப்பு மருத்துவப் பரிவிற்கும் அரசின் இன சுழற்சி மற்றும் இட ஒதுக்கீடு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, முழு தகுதி பெற்று தேர்ச்சி பெற்ற 556 நபர்களில் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் 283 நபர்களும், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் 103 நபர்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 80 நபர்களும், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பினர் பிரிவில் 5 நபர்களும், பழங்குடி வகுப்பு பிரிவில் 3 நபர்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்) பிரிவில் 12 நபர்களும் மற்றும் இதர வகுப்பினர் 70 நபர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் தகுதியுடைய ஒரு மாற்றுத்திறனாளி விண்ணப்பத்திருந்து அவரும் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் தகுதிப் பெற்று தேர்ச்சி பெற்ற 556 சிறப்பு உதவி மருத்துவர்களில் 195 நபர்கள் தங்கள் முதுநிலை பட்டபடிப்பை தனியார் மருத்துவக் கல்லூரிகள் / நிகர்நிலை பல்கலைகழகங்களிலும், 361 நபர்கள் அரசு மருத்துவ கல்லூரிகள் / பல்கலை கழகங்களிலும் பயின்றவர்கள் ஆவர். விண்ணப்பித்த சிறப்பு உதவி மருத்துவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் படித்திருந்தாலும், தங்கள் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பினை மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய அறிவிக்கை வெளியிடப்பட்ட அன்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருந்தோர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

மகத்தான சேவை புரிந்து வரும் மக்கள் நல்வாழ்வு துறையின் ஓர் அங்கமாக விளங்கும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் பொது மக்கள் மற்றும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டும் தங்கள் பணியின் பொறுப்பை உணர்ந்தும் உடனடியாக பணிக்கு திரும்பிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உண்மை நிலை இவ்வாறிருக்க மருத்துவர்களின் தெரிவை விரைவுபடுத்தும் உயரிய நோக்கத்துடன் தொடங்கப்பட்ட மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் உன்னத சேவையை பாழ்படுத்தும் நோக்கத்துடன் மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ என்ற ரீதியில் சேற்றை வாரி இறைக்கும் வெற்று அறிக்கைப் போராளிகளின் சொல்லும், வாய்ச்சொல் வீரர்களின் செயலும் கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com