அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் தற்கொலை வழக்கு: விசாரணை அதிகாரியாக சத்தியமூர்த்தி நியமனம்

அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் தற்கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் தற்கொலை வழக்கு: விசாரணை அதிகாரியாக சத்தியமூர்த்தி நியமனம்
Published on

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான நாமக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணியம் (58) கடந்த 8-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் அவரது விவசாய தோட்ட வீட்டில் அவர் இறந்து கிடந்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது, நாமக்கல் மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பில் உள்ள இவரது வீட்டிலும் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சோதனை நடந்தபோது சுவிட்சர்லாந்து சென்றிருந்த இவர் 20 நாட்களுக்கு முன்பு நாமக்கல் திரும்பினார். 2 முறை சென்னையில் உள்ள வருமானவரி துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜரானார்.

மீண்டும் விசாரணைக்கு செல்ல இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு 4 பக்க கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் விளக்கி இருந்தார். தொழில் ரீதியில் காண்ட்ராக்டர் ஒருவர் தொல்லை கொடுத்ததாகவும், அதிகாரி ஒருவர் மிரட்டியதாலும் தற்கொலை செய்து கொண்டதாக கூறி இருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், தனக்கும் எந்த தொடர்பு இல்லை என்றும் அவர் கூறி இருந்தார்.

தொழில்ரீதியில் தொல்லை கொடுத்த உறவினரான காண்ட்ராக்டர் வருமானவரி துறை அதிகாரியிடம் பொய்யான தகவல்களை கொடுத்து தன் வீட்டில் சோதனை நடத்த ஏற்பாடு செய்ததாக அந்த கடிதத்தில் கூறி இருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனைக்கும், தன் வீட்டில் நடந்த சோதனைக்கும் தொடர்பு கிடையாது என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையை முதலில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் நாமக்கல் மதுவிலக்கு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு செந்தில் ஆகியோர் விசாரித்தனர். தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com