அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் தற்கொலை: முக்கிய புள்ளிகள் நெருக்கடி காரணமா?

வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் தற்கொலை செய்து கொள்வதற்கு முக்கிய புள்ளிகள் நெருக்கடி காரணமா என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுப்ரமணியம்
சுப்ரமணியம்
Published on

நாமக்கல் மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்தவர் கே.ஆர்.சுப்ரமணியம்.

நாமக்கல் மாவட்ட பில்டர் அசோசியேசன் பொருளாளரான இவர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் ஆவார். தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி உள்பட பல்வேறு பணிகளை சுப்ரமணியம் மேற்கொண்டு வந்தார்.

கடந்த மாதம் 7-ந் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவரது உறவினர் கல் குவாரிகளில் சோதனை செய்த போது சுப்ரமணியம் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதன்பின்னர் சுவிட்சர்லாந்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய சுப்ரமணியம் கடந்த 4-ந் தேதி சென்னை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் சுப்ரமணியம் நாமக்கல் அருகே மோகனூரை அடுத்த செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள விவசாய தோட்டத்தில் நேற்று இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த மோகனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சுப்ரமணியத்தின் உடலை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கு நடந்த பரிசோதனையில் அவரது வயிற்றில் வி‌ஷம் இருந்ததால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவர் இறந்து கிடந்த இடத்தில் செவன்-அப் பாட்டில் ஒன்றும் கிடந்ததால் அவர் குளிர்பானத்தில் குருணை மருந்தை கலந்து குடித்திருக்கலாம் என்று போலீசார் கூறினர்.

இதற்கிடையே மகன் சபரி கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரேத பரிசோதனை முடிந்ததும் நேற்று மாலை அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நாமக்கல் மின் மயானத்தில் சுப்ரமணியம் உடல் தகனம் செய்யப்பட்டது.

சுப்ரமணியத்திற்கு சாந்தி (52) என்ற மனைவியும், அபிராமி (30) என்ற மகளும், சபரி (24) என்ற மகனும் உள்ளனர். அபிக்கு திருமணமாகி சேலம் வலைசையூரில் வசித்து வருகிறார்.

சுப்ரமணியத்தின் மரணம் குறித்து அவரது நண்பர்கள் கூறியதாவது, சுப்ரமணியம் மிகவும் பொறுமையானர். அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து சுப்ரமணியத்தின் அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது. வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கரை காட்டிலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு நெருக்கமானவர். நாமக்கல்லை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பெரியசாமி , சுப்ரமணியத்தின் சகோதரர் ஆவார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுப்ரமணியத்தின் அண்ணன் காளியண்ணன் கூறுகையில், சுப்ரமணியத்தின் கட்டுமான பணிகளை அவரது மகன் சபரி, மருமகன் அரவிந்த் ஆகியோர் கவனித்து வந்தனர். நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற சுப்ரமணியம் மயக்கம் ஏற்பட்டு திடீரென இறந்தாக கூறுகின்றனர் என்றார்.

சுப்ரமணியனின் மரணம் குறித்து அவரது பண்ணை வீட்டில் வேலை செய்யும் பாப்பம்மாள் கூறியதாவது:-

அவர் (சுப்பிரமணியம்) சென்னை சென்று வந்ததிலிருந்தே அவரது முகம் வாடியே இருந்தது. நான் கூட ஏன் முகம் வாடியுள்ளது என்று அவரிடம் கேட்டேன். ஒன்றும் இல்லை பாப்பம்மா என்று அவர் கூறினார்.

இன்று காலை (அதாவது நேற்று) நான் தோட்ட வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த அவர் எனக்கு களைப்பாக உள்ளது. சற்று நேரம் தூங்கிவிட்டு வருகிறேன் என்று கூறினார். நானும் அவர் தூங்கத்தான் சென்றுள்ளார் என்று எனது வேலையை கவனித்தேன். ஆனால் சிறிது நேரத்தில் இப்படி நடந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

சுப்ரமணியனின் தோட்டத்தில் பீகாரைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களிடமும் மோகனூர் போலீசார் விசாரணை நடத்தினர். தோட்ட சூப்பர் வைசர் வடிவேல், வேலைக்கார பெண் பாப்பம்மாள் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு சென்று வந்த சுப்பிரமணியம் அ.தி.மு.க.வின் இரு அணி முக்கிய பிரமுகர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர்கள் ஏதேனும் நெருக்கடி கொடுத்து இருக்கலாம் என்றும், அதனால் அவர் தற்கொலை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் நண்பர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

2 முறை சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு சென்ற சுப்பிரமணியத்திடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் குறித்தும், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்தும், அவரிடம் அதிகாரிகள் கேட்ட கேள்விகளால் தனக்கும் மேலும் சிக்கல் வரும் என்ற அச்சத்தில் அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com