அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் எழுதிய 4 பக்க கடிதம் சிக்கியது: தற்கொலை குறித்து பரபரப்பு தகவல்

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான சுப்பிரமணியம் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய 4 பக்க கடிதம் கிடைத்துள்ளது. இதில் தற்கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் எழுதிய 4 பக்க கடிதம் சிக்கியது: தற்கொலை குறித்து பரபரப்பு தகவல்
Published on

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான சுப்பிரமணியம் (வயது 58). இவர் கடந்த 8-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னைக்கு 2 முறை வருமான வரி அதிகாரிகளின் விசாரணைக்காக சென்று விட்டு வந்த அவர் தற்கொலை செய்ததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

முக்கிய புள்ளிகளின் மிரட்டலால் அவர் தற்கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சுப்பிரமணியம் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய 4 பக்க கடிதம் இன்று வெளியானது. அந்த கடிதத்தில் தற்கொலைக்கு யார் காரணம் என்பதை அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பதை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நான் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டிடப் பணியை ஒப்பந்தம் எடுத்து கட்டி வருகிறேன். இந்த கட்டிடங்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் நடத்தும் குவாரியில் இருந்து ஜல்லிக்கற்கள் மட்டுமே வாங்கினேன். மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அவர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கும் என் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் வீட்டில் பணம் மற்றும் தங்க கட்டிகள் பதுக்கி வைத்திருப்பதாக பி.எஸ்.கே. தென்னரசு என்பவர் வருமான வரித்துறை அதிகாரியிடம் புகார் செய்தார். அவர் தொழில் போட்டியால் என்னைப் பற்றி தவறயான தகவல்களை பரப்பி வந்தார்.

அவர் கொடுத்த பொய்யான தகவல்களின் காரணமாக என் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

எனக்கும் அவருக்கும் தொழில் போட்டி இருந்தது. அவரும் மருத்துவக்கல்லூரி கட்டிடங்களை கட்டி வந்தார். நானும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களை கட்டி வந்தேன்.


இந்த தொழில் போட்டியால் என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருமான வரி சோதனையில் சிக்க வைத்துவிட்டார். எனது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. செலவுக்கு கூட பணம் எடுக்க முடியவில்லை. சோதனை நடந்ததால் என்னுடைய கவுரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டது. என்னுடைய தற்கொலைக்கு அவர் தான் காரணம்.

என் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது பி.எஸ்.கே. தென்னரசு என்னை ஆபாசமாக திட்டினார்.

இவ்வாறு அந்த கடிதத்தில் சுப்பிரமணியம் எழுதி இருந்தார்.

அவர் நடத்திய அபிராமி பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற லெட்டர்பேடில் தனது கைப்பட இந்த கடிதத்தை சுப்பிரமணியம் எழுதி இருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com