அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் தற்கொலை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. மாற்றம்

அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் தற்கொலை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் நாமக்கல் வந்து விசாரணையை தொடங்க உள்ளனர்.
அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் தற்கொலை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. மாற்றம்
Published on

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான நாமக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணியம் (58) கடந்த 8-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் அவரது விவசாய தோட்ட வீட்டில் அவர் இறந்து கிடந்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தபோது, நாமக்கல் மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பில் உள்ள இவரது வீட்டிலும் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சோதனை நடந்தபோது சுவிட்சர்லாந்து சென்றிருந்த இவர் 20 நாட்களுக்கு முன்பு நாமக்கல் திரும்பினார். 2முறை சென்னையில் உள்ள வருமானவரி துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜரானார்.

மீண்டும் விசாரணைக்கு செல்ல இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு 4 பக்க கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் விளக்கி இருந்தார். தொழில் ரீதியில் காண்ட்ராக்டர் ஒருவர் தொல்லை கொடுத்ததாகவும், அதிகாரி ஒருவர் மிரட்டியதாலும் தற்கொலை செய்து கொண்டதாக கூறி இருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், தனக்கும் எந்த தொடர்பு இல்லை என்றும் அவர் கூறி இருந்தார்.

தொழில்ரீதியில் தொல்லை கொடுத்த உறவினரான காண்ட்ராக்டர் வருமானவரி துறை அதிகாரியிடம் பொய்யான தகவல்களை கொடுத்து தன் வீட்டில் சோதனை நடத்த ஏற்பாடு செய்ததாக அந்த கடிதத்தில் கூறி இருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனைக்கும், தன் வீட்டில் நடந்த சோதனைக்கும் தொடர்பு கிடையாது என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த கடிதத்தை வைத்து ஒப்பந்தாரர் சுப்பிரமணியத்தின் மனைவி சாந்தி, மகன் சபரீஷ், மகள் அபிராமி, மருமகன் அரவிந்தன் மற்றும் உறவினர்கள், தோட்டக்காரர் பெருமாள் அவரது மனைவி ரத்தினம், தோட்டத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்ட பீகார் மாநில வாலிபர்கள் ஆகியோரிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் விசாரணை நடத்தினார்.

அப்போது சுப்பிரமணியம் எழுதிய கடிதத்தை காட்டி இது அவர் எழுதிய கடிதம் தானா என்று அவருடைய குடும்பத்தினரிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து சுப்பிரமணியத்தின் கையெழுத்து தான் என்பதை உறுதி செய்தனர்.

சுப்பிரமணியம் தற்கொலை வழக்கை முதலில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ விசாரித்தார்.

அவரிடம் இருந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் இரவு நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். விரைவில் சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் நாமக்கல் வந்து விசாரணையை தொடங்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com