பாதுகாப்பு முகாம்களில் 2,364 பேர் தஞ்சம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

வெள்ளம் பாதித்தவர்கள் தங்குவதற்காக 19 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டதில் 2364 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பாதுகாப்பு முகாம்களில் 2,364 பேர் தஞ்சம்: அமைச்சர் உதயகுமார் தகவல்
Published on

சென்னை:

சென்னை எழிலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்னும் சில நாட்கள் நீடிக்கும். கடந்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 14 மாவட்டங்களில் 5 மி.மீ.க்கும் குறைவாக மழை பெய்துள்ளது. 5 மாவட்டங்களில் மழை இல்லை

காஞ்சீபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் கர்ப்பிணி பெண்கள் 2 பேர் வெள்ளத்தில் சிக்கிகொண்டனர். இதுபற்றி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்ததை தொடர்ந்து மீட்பு குழுவினர் அனுப்பப்பட்டு உடனடியாக மீட்கப்பட்டனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெள்ளம் பாதித்தவர்கள் தங்குவதற்காக 19 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டதில் 2364 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3731 மில்லியன் கன அடியில் தற்போது 400 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் 3645 மி.கனஅடியில், மொத்த கொள்ளளவான 391 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3505 கன அடியில் 805 மி.கனஅடியும் சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 831 மி. கன அடியில் 331 மி.கனஅடி இருப்பு உள்ளது.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 14,098 ஏரிகளில் 915 ஏரிகள் நிரம்பியுள்ளன. முழுவீச்சில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் உதயகுமார் 24 மணிநேரமும் கட்டுப்பாட்டு அறையில் தங்கி அனைத்து பணிகளையும் கண்காணித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com