பறவைக்காய்ச்சல் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

பறவைக்காய்ச்சல் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
Published on

கோவில்பட்டி:

கழுகுமலை அருகே உள்ள துறையூர் ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் கொரோனா பீதி பரவி வருகிறது. கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவதால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. மக்கள் பயமின்றி சாப்பிடலாம். பறவை காய்ச்சலை தடுக்கும் வகையில் தமிழக-கேரள எல்லையில் 26 இடங்களில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி மூலமாக சுத்தம் செய்யப்படுகிறது.

பறவை காய்ச்சல், கொரோனா உள்ளிட்ட எது வந்தாலும் அதனை சமாளிக்க கூடிய திறமை நம்மிடம் உள்ளது. பறவைக்காய்ச்சல் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பறவை காய்ச்சல் குறித்து வதந்தி பரப்பிய ஒருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

கோழி பண்ணைகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. ஆகையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. கொரோனா போலவே பறவை காய்ச்சலுக்கும் தடுப்பு நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் வலியுறுத்தி உள்ளார். இந்தாண்டு ரூ.43 கோடி செலவில் 108 கால்நடை மருந்தகங்கள் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com