சேலம்- சென்னை பசுமை விரைவு சாலை திட்டம் 2 மாதத்தில் தொடங்கப்படும்- அமைச்சர் உதயகுமார்

சேலம்- சென்னை பசுமை விரைவு சாலை திட்டம் தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதத்தில் தொடங்க இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
சேலம்- சென்னை பசுமை விரைவு சாலை திட்டம் 2 மாதத்தில் தொடங்கப்படும்- அமைச்சர் உதயகுமார்
Published on

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி மற்றும் சேலம் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் நேற்று இரவு நடந்தது. விழாவிற்கு ஏ.பி.சக்திவேல் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.பி.சரவணன் வரவேற்றார். பன்னீர்செல்வம் எம்.பி., மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.செல்வராஜூ, கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், ஏழை, எளிய மக்களுக்கு தையல் எந்திரம், குடம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் இந்த ஆட்சி வெகுநாட்கள் நீடிக்காது என்றும், அ.தி.மு.க. அழிந்துவிடும் என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வந்தார்கள். ஆனால் எதற்கும் அஞ்சாமல் தன்னுடைய ஆற்றல், நிதானம், திறமையால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார். அதாவது, நிறைகுடம் தழும்பாமல் ஓராண்டு நிறைவு செய்து இருக்கிறது. அதோடு, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னமும் மீட்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதா அவர்கள் சட்ட போராட்டத்தை தொடங்கினார். ஆனால் அந்த போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 6 வாரத்திற்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இது அம்மாவின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி.

காவிரி நதி நீரை இனி யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது பொது சொத்து என்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வரலாற்று தீர்ப்பை சத்தம் இல்லாமல் பெற்ற அரசு நம்முடைய அம்மாவின் அரசு.

உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க சென்னைக்கு வந்த பிரதமர் மோடியிடம், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தியுள்ளார். அதைத்தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அவர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமையும்.

சென்னையில் இருந்து சேலம் வருவதற்கு 4 வழிகள் இருக்கிறது. 4 வழிகளிலும் மக்கள் பயணித்து இருப்பீர்கள். 4 வழிகள் இருந்தாலும் போதாது, என் சேலத்து மக்களுக்காக 8 வழிச்சாலையான பசுமை விரைவு சாலை அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று தந்தார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இந்த சாலை அமைவதால் சேலம்-சென்னைக்கு 6 மணி நேரம் பயண போக்குவரத்து 3 மணி நேரமாக குறைகிறது. பசுமை விரைவு சாலை திட்டம் தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதத்திலேயே தொடங்க இருக்கிறோம். இது தொடங்கி முடிவுற்ற பிறகு 3 மணி நேரத்திலேயே சென்னை-சேலத்திற்கும், சேலம்- சென்னைக்கும் வந்து செல்லாம்.

இந்த திட்டம் பெறும் 2-வது மாநிலம் தமிழகமாகும். இது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்ற சாதனையாகும். இப்படி பல்வேறு சாதனைகளை சத்தம் இல்லாமல் அவர் செய்து வருகிறார்.


தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியும் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு திடீரென வருவதற்கு என்ன காரணம்? முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரமுடியாத காரணத்தால் அவரது மகன் தற்போது அரசியலுக்கு வருகிறார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்று சிலர் கூறிவருகிறார்கள். சமீபகாலமாக ரவுடிகள் மீது போலீசார் எடுக்கும் நடவடிக்கையால் அவர்கள் தானாகவே பயந்து சரண் அடைந்து வருகின்றனர்.

இவ்வாறு ஆர்.பி.உதய குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com