

மதுரை:
மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.38 லட்சம் செலவில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த வணிக வளாகத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அனைத்து துறைகளும் கடந்த தி.மு.க. ஆட்சி காலங்களில் நலி வடைந்த நிலையில் இருந்தது. போக்குவரத்து துறையும் நலிவடைந்து அடமானம் வைக்கப்பட்டது.
முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்ற பின்னர் போக்குவரத்து கழகங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால் தி.மு.க.வினர் வேண்டுமென்றே அ.தி.மு.க. அரசு மீது களங்கத்தை சுமத்தி வருகின்றனர். இப்போது அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழக கவர்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதில் எந்த தவறும் இல்லை. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஆய்வு செய்யும்போதுதான் தமிழக அரசின் செயல்பாடுகள் அவருக்கு நேரடியாக தெரியவரும்.
மத்திய அரசுடன் பேசி தமிழகத்திற்கு தேவையான கூடுதல் திட்டங்களை அவர் பெற்றுதருவார். எனவே கவர்னர் ஆய்வு செய்வது ஆரோக்கியமான நடவடிக்கைதான்.
இவ்வாறு அவர் கூறினார்.