அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்பதே 1 கோடி தொண்டர்களின் விருப்பம்: அமைச்சர் செல்லூர் ராஜூ

அ.தி.மு.க. அணிகள் இணைவதே 1 கோடி தொண்டர்களின் விருப்பமாகும். அவர்களின் விருப்பம் விரைவில் நிறைவேறும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்பதே 1 கோடி தொண்டர்களின் விருப்பம்: அமைச்சர் செல்லூர் ராஜூ
Published on

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 88-வது வார்டான சோலையழகுபுரத்தில் 2 இடங்களில் ஆழ்துளை கிணறு குடிநீர் தொட்டியை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவி வருகிறது. கடந்த 10 மாதங்களாக மதுரை மாநகர மக்களுக்கு முறை வைத்து குடிநீர் வழங்கப்பட்டது. குடிநீர் பிரச்சனை ஏற்படாத வகையில் மக்கள் பணி செய்து வருகிறோம்.

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அரசு சார்பில் ஒவ்வொரு வாரமும் 2 மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

வருகிற ஜனவரி மாதம் சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா விமரிசையாக நடத்தப்படும். இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித்தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.


ஜெயலலிதாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மதுரை மேற்கு தொகுதியில் 2-வது முறையாக என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்துள்ளீர்கள். அமைச்சர் பதவி பெரிதல்ல. மக்களுக்காக சேவை செய்வதே உன்னத கடமையாகும்.

தாய், தந்தை இல்லாத வீடு எப்படி இருக்குமோ அது போலத்தான் நமது இயக்கமும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

விரைவில் அ.தி.மு.க. அணிகள் ஒன்று சேரும். அம்மாவின் லட்சிய கனவான 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி நடக்கும்.

எனவே எப்போதும் போல் பொதுமக்களாகிய நீங்கள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அணிகள் இணைப்பு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க.வில் பிரிவினை என்பது இல்லை. ஒரே இயக்கமாகத்தான் உள்ளது. அ.தி.மு.க. அணிகள் இணைவதே 1 கோடி தொண்டர்களின் விருப்பமாகும். அவர்களின் விருப்பம் விரைவில் நிறைவேறும்.

இரட்டை இலையை மீட்டு வருகிற பாராளுமன்ற தேர்தலையும், அடுத்த சட்டமன்ற தேர்தலையும் சந்தித்து வெற்றி பெறுவோம். முதல்-அமைச்சர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com