மாவட்டம் தோறும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

தமிழகத்தில் மாவட்டந்தோறும் பேரிடர் மீட்பு வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர் என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Published on

சென்னை:

வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஜம்முவில் நடைபெற்ற மாநாட்டில் நீர் ஆற்றல் பேரிடர் மேலாண்மை குறித்து தமிழகத்தின் அனுபவம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கிடையே நடைபெறும் கருத்து பரிமாற்றம் மூலம் குறைந்த அளவிலான நீரினை வீடு, விவசாயம் மற்றும் இதர பயன்பாட்டுக்கு எவ்வாறு சிறப்பாக உபயோகிக்க முடியும் என்றும், நகரங்களில் வெள்ள பாதிப்புகளை எவ்வாறு குறைக்க முடியும் என்பதையும் நாம் அறிய முடியும்.

பேரிடர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு அதன் பாதிப்புகளை குறைக்க முடியும்.

இந்தியா பல்வேறு நிலைகளில் பேரிடர்களை சந்திக்கும் இயற்கையான நில அமைப்பில் உள்ளது.

தமிழக கடற்கரையின் நீளம் 1076 கி.மீ ஆகும், இது நம்நாட்டு கடற்கரையின் மொத்த நீளத்தில் சுமார் 15 சதவீதம் ஆகும். தமிழ்நாடு பல பேரிடர்களால் பாதிக்கப்படும் சூழ்நிலையில் உள்ளது. வடகிழக்கு பருவ மழை காலங்களில் சூறாவளியால் பாதிக்கப்படுகின்றது. கூடுதலாக பலத்த மழை மற்றும் மேக வெடிப்பினால் பாதிக்கப்பட்டு நகரம் மற்றும் கிராமங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுகின்றது. கடந்த காலங்களில் கஜா, ஒக்கி, வர்தா, நீலம், தானே, ஜல் மற்றும் நிஷா ஆகிய புயல்களால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் பாராட்டப்பட்டுள்ளது.

பேரிடர் அபாயம் ஏற்படுத்தும் சூழ்நிலைகளை களைவதன் மூலம் பாதிப்புகளை குறைக்கலாம்.

தமிழகத்தில் மாவட்டந்தோறும் பேரிடர் மீட்பு வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு சேட்டிலைட் போன்கள் மற்றும் நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் மத்திய இணை மந்திரி ஜிஜேந்திர சிங், ஜம்மு கவர்னர் மூர்மு, தமிழக வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன் தீப்சிங்பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஹித்தேஷ் குமார், மக்வானா, விபுநாயர், நாகை கலெக்டர் பிரவீன்நாயர், நீலகிரி கலெக்டர் இன்னாசென்ட் திவ்யா மற்றும் உயர் அதிகாரிகள் பேசினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com