ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா மீண்டும் பதவி ஏற்பு

தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீண்டும் பொறுப்பேற்றார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
Published on

தேனி:

தேனி ஆவினில் 17 இயக்குனர்கள், 474 பொதுக்குழு உறுப்பினர்கள் இருந்து வருகிறார்கள். மாவட்டத்தில் மொத்தம் 33 ஆயிரம் பேரிடம் தேனி ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் செய்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி துணைமுதல்வர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா தேனி ஆவின் தலைவராக அறிவிக்கப்பட்டு அதோடு 17 இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் தேனி என்.ஆர்.டி நகரில் வாடகை கட்டடம் எடுத்து தேனி ஆவின் அலுவலகம் திறக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆவின் தலைவராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி பதவி வகித்து வந்தார். இவர் தன்னிச்சையாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும், இதற்கு தடை விதிக்க கோரியும் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த அமாவாசை என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ஓ.ராஜா பதவி ஏற்றதை ரத்து செய்து கடந்த 23-ந் தேதி உத்தரவிட்டது. மேலும் பொக்குழுவை கூட்டி தற்காலிக தலைவரை தேர்வு செய்யுமாறும் அறிவுறுத்தி தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து பொதுக்குழு நிர்வாகிகளை கூட்டி அதில் ஏகமனதாக ஓ.ராஜா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இன்று தேனி என்.ஆர்.டி. திருமண மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. தலைவராக ஓ. ராஜாவும், துணைத் தலைவராக செல்ல முத்து என்பவரும் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சி பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் நடந்தது. பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com