

சென்னை:
விடுமுறை காலத்தில் சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
12-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே சென்னையில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் செல்வார்கள். இதற்காக ஆம்னி பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
அப்போது அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன.
அதன் அடிப்படையில் ஆம்னி பஸ்கள் வசூலித்த கட்டண விவரங்களை ஆய்வு செய்துள்ளோம். பயணிகளிடத்தில் அதிக கட்டணத்தை பல ஆம்னி பஸ் நிர்வாகங்கள் வசூலித்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது புகார் தெரிவிப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 18004256151 என்ற நம்பருக்கு புகார் செய்யலாம். அந்த பஸ் விவரங்களை இந்த நம்பருக்கு தெரிவித்ததும் அதிகாரிகள் வந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
கூடுதல் கட்டண புகார் உண்மை என்றால், அந்த ஆம்னி பஸ்சின் பெர்மிட்டை ரத்து செய்யும் அளவுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து 980 பஸ்களை இயக்குவதற்கு போக்குவரத்துக் கழகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கைவசம் அதற்கும் அதிகமாக பஸ்கள் உள்ளன. பயணிகளின் தேவைக்கு ஏற்ப அவை பயன்படுத்தப்படும். முக்கிய நகரங்களில் இருந்தும் பஸ்களை இயக்குவதற்கும் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.