கரூர் வழியாக புதிய பஸ்கள் இயக்கம்- அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

கரூர் வழியாக 3 புதிய பஸ்கள் இயக்கம் நிகழ்ச்சி நடந்தது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
Published on

கரூர்:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 4-ந்தேதி, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 500 பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கரூர் பஸ் நிலையத்தில் 3 புதிய பஸ்களை மக்கள் பயன் பாட்டுக்காக இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார்.

இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்சி முதல் ஈரோடு வரையிலும், திருச்சி முதல் திருப்பூர் வரையிலும், முசிறி முதல் மணப்பாறை வழியாக மதுரை வரையிலுமான வழித் தடங்களுக்கு 3 புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது.

பின்னர் கரூர் மாவட்ட போக்குவரத்துத்துறையில் நடத்துனராக இருந்து டிக்கெட் பரிசோதகராக பதவி உயர்வுபெற்ற 11 பேர் உள்பட 12 பேருக்கு பணி உயர்விற்கான ஆணைகளை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் கீதா மணிவண்ணன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் சந்தியா, கரூர் மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் குணசேகரன், துணை மேலாளர் முத்து மற்றும் மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகர செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, மாணவரணி தானேஷ், ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், சேரன் பழனிச்சாமி, எம்.ஆர்.கே.செல்வமணி, ஆயில் ரமேஷ், பழனிராஜ், ராயனூர் சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com