புதுவை கவர்னர் கிரண்பேடி மீது புகார் கூறி ஜனாதிபதிக்கு அமைச்சர் கடிதம்

புதுவை கவர்னர் கிரண்பேடி மீது புகார் கூறி அமைச்சர் கந்தசாமி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
புதுவை கவர்னர் கிரண்பேடி மீது புகார் கூறி ஜனாதிபதிக்கு அமைச்சர் கடிதம்
Published on

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

மோதல் தற்போது மீண்டும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் துறை ரீதியான புகார்கள் தன்னிடம் வந்திருப்பதாகவும், அதனை சி.பி.ஐ.யிடம் புகார் செய்யும் முன்பு தன்னை மகனுடன் வந்து பார்க்கும் மாறும் கவர்னர் கிரண்பேடி, சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்க மறுத்த அமைச்சர் கந்தசாமி அரசின் நலதிட்ட கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே சந்திக்க முடியும் என கூறினார். மேலும் பாராளுமன்றம் முன்பு கவர்னரை திரும்ப பெற கோரி ஜனவரி மாதம் உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் கந்தசாமி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

புதுவை யூனியன் பிரதேச சட்டம் 1963 முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் கவர்னருக்கு சில அதிகாரங்களை வழங்கியுள்ளது. இந்த அதிகாரத்தின் படி கடந்த 54 ஆண்டுகளாக பிரச்சினை இல்லாமல் நிர்வாகம் சுமூகமாக நடந்தது.

ஆனால் தற்போதைய கவர்னர் கிரண்பேடி தனது அதிகார எல்லையை மீறி செயல்பட்டு வருகிறார். அதோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சரவை எடுக்கும் அனைத்து நலத் திட்டங்களுக்கும் முட்டுக்கட்டையாக உள்ளார். இதனால் ஏழைகளுக்கான திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அரசு அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகளை மிரட்டுகிறார். அரசின் கோப்புகளை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார். அவர் ஏற்றுக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி செயல்படுகிறார்.

அவரது அதிகார எல்லைக்குள் செயல்படுமாறு அவருக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் அவர் தனது நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால் வருகிற ஜனவரி மாதம் பாராளுமன்றம் முன்பு தொடர் உண்ணாவிரதம் இருப்பேன்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com