முரளிதரன் வேடத்தில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி யோசித்துப் பார்க்க வேண்டும்: கடம்பூர் ராஜூ

முரளிதரன் வேடத்தில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி யோசித்துப் பார்க்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ
Published on

133 டெஸ்டுகள், 350 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடி இலங்கையின் மகத்தான கிரிக்கெட் வீரராக அறியப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்துக்கு 800 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படவுள்ளது. அடுத்த வருடத் தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும். 2021 வருட இறுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழில் உருவாகும் இப்படம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் ஹிந்தி, வங்காளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்படும். எனினும் இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள். #ShameOnVijaySethupathi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. 

இந்நிலையில் 800 படத்தில் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-

முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி அவர் யோசித்துப் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த உணர்வாளர்களின் உணர்வுகளை மதிக்கவேண்டிய இடத்தில் அவர் உள்ளார். நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் அவருடைய எதிர்காலத்துக்கு நல்லது. தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு குறித்து ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com