

கோவை:
ஊட்டியில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக இன்று கோவை வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக தொண்டர்களுக்கு கூறினார். அதனடிப்படையில் மதுரையில் தொடங்கி நாளை ஊட்டியிலும், நாளை மறுநாள் திண்டுக்கல்லிலும் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழா எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல. விழாவில் அந்தந்த மாவட்டங்களில் நலத்திட்டங்களும் வழங்கப்படுகிறது. புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே இது மக்களுக்கான விழா.
இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக தொடர்ந்து மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணி நியமனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 2-ந் தேதி 110 சித்த மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் வழங்குகிறார். 333 பார்மசியர்கள், 1034 லேப் டெக்னீசியர்களும் விரைவில் நியமிக்கப்பட இருக்கறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 44 சி.டி. ஸ்கேன், 18 எம்.ஆர்.ஐ. எந்திரங்கள் கொண்டு வரப் பட இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.