பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் பெரிய மாற்றம் வரும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

வருகிற 12-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் மிகப்பெரிய மாற்றம் வரும்என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் பெரிய மாற்றம் வரும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
Published on

நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் கோவிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய இன்று அமைச்சர்கள் கடம்பூர்ராஜூ மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் நெல்லை வந்தனர். அப்போது கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு நடத்துவதில் தமிழக அரசிற்கு உடன்பாடில்லை. நீட் தேர்வு வரவிடாமல் தடுக்க கடைசி வரை போராடினோம். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான அழுத்தம் கொடுத்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் உத்தரவு மூலம் வேறு வழியின்றி நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது.


இதற்காக வருத்தம் தெரிவித்து பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே இதற்காக மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டாம். போராட்டத்தை கைவிடவேண்டும். தினகரன் இன்று கவர்னரை சந்தித்து பேசுவதால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. கட்சியில் அனைத்து தொண்டர்களும் ஒன்றாகவே உள்ளோம். வருகிற 12-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் மிகப்பெரிய மாற்றம் வரும். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடைய தேர்தல் அறிக்கையின்படி படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும். அதன்படி ஆயிரம் கடைகள் பூட்டப்பட்டுள்ளது. அதுதிறக்கப்படவில்லை. கோர்ட் உத்தரவுபடி தற்காலிகமாக பூட்டப்பட்ட கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் பழைய கோவில்களை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நெல்லை அடுத்த திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூ நாதர் கோவிலில் பழங்கால மூலிகை ஓவியங்கள், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசு ரூ.1 கோடியே 45 லட்சம் ஒதுக்கியுள்ளது. இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய செல்கிறோம். நெல்லையப்பர் கோவிலில் ரூ.2 கோடி செலவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. 6 மாதத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com