மதவாதத்தை தூண்டி விடுகிறார்: கமல்ஹாசன் மீது அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க மதவாதத்தை தூண்டி விடுகிறார் என கமல்ஹாசன் மீது அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டியுள்ளார்.
மதவாதத்தை தூண்டி விடுகிறார்: கமல்ஹாசன் மீது அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

தூய்மை இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற பல்வேறு திட்டங்களை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

தற்போது அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போரின் கணக்குகளுடன் ஆதார் மற்றும் செல்போன் எண்களை இணைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு கொள்கை முடிவாக அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிடம் பெற்றுள்ளது தமிழகத்திற்கு பெருமையாகும். இதே போல் பழமை மாறாமல் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலை புதுப்பித்ததற்காக யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றும் பணி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தீவிரமாக நடந்து வருகிறது என்றார்.

இந்து தீவிரவாதம் பற்றி நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருப்பது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நடிகர் கமல்ஹாசன் சிறந்த கலைஞர். ஆனால் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்து, பிரிவினையை உண்டாக்க கூடாது. நிலவேம்பு கசாயம் குறித்து அவர் பேசியதற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்தனர்.

தற்போது இந்து தீவிரவாதம் பற்றி கமல்ஹாசன் கூறியிருப்பது, மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க மதவாதத்தை தூண்டி விடுவதாகத்தான் அர்த்தமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com