

காசிமேட்டில் நேற்று முன்தினம் மீனவர்கள் மறியல் போராட்டம் நடத்திய போது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் காசிமேடு மீனவர்களை டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காசிமேட்டில் அதிக திறன்கொண்ட சீனா என்ஜினினை அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்களும் தி.மு.க.வினரும் தான் பயன்படுத்தினர்.
மீனவர் மீது தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய சீனா என்ஜினை தடை செய்வது குறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடியடிக்கு முழுக்காரணம் அமைச்சர் ஜெயக்குமார்தான். அவர் தனது அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தி உள்ளார். வெகுவிரைவில் அவர் மீனவ மக்களுக்கு பதில் கூற வேண்டும்.
அமைச்சர் ஜெயக்குமாரிடம் தொகுதி மக்கள் யாரும் இலவச பொருள் கேட்கவில்லை ஆனால் அவர் தொகுதி மக்களுக்கு இலவச தட்டு வழங்கி உள்ளார். எவ்வளவு தட்டு கொடுத்தார் என்று அவர் சொல்லட்டும். அனைத்தையும் நான் திருப்பி கொடுக்கிறேன்.
காவல் துறையினர் மீனவர்கள் மீதும், இளைஞர்கள் மீதும் பொய் வழக்கு போடுகிறார்கள். உடனடியாக காவல் துறையினர் மீனவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
தமிழகத்தில் அம்மா ஆட்சி நடப்பதாக கூறிவரும் அரசுக்கு, அமைச்சர் ஜெயக்குமாரால் அவமானம்.