வெள்ளலூரில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

கோவை வெள்ளலூரில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணியினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
வெள்ளலூரில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
Published on

கோவை:

கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் இன்று உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் புதிய பஸ்நிலையம் கட்டும்பணி தொடக்க விழா நடந்தது.

கலெக்டர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு புதிய பஸ் நிலையம் கட்டும்பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது,

மறைந்த முதல்-அமைச்சர் அம்மாவின் எண்ணங்களை சாத்தியமாக்கும் வகையில் முதல்-அமைச்சர் சீர்மிகு ஆட்சி செய்து வருகின்றார். தமிழகத்தின் மாநகராட்சியினை ஒட்டியுள்ள பகுதிகள், ஊரக மற்றும் கிராமப்பகுதிகளை முன்னேற்றத்திற்கு கொண்டுவருவதற்கும், மாநகர பகுதிகளை போலவே அனைத்து வித அடிப்படை வசதிகளிலும் தன்னிறைவு பெறவும் புதிய திட்டங்களும், பல புதிய முயற்சிகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாகவே, இன்று வெள்ளலூர் பேரூராட்சியில் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.2.50 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கி வைக்கப்படுகின்றது.

இப்பஸ் நிலையத்தில், பஸ் நிறுத்த இடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, முன்பதிவு மையம், கடைகளின் எண்ணிக்கை, ஓய்வுக்கான அறை, உணவகம், பேக்கரி, பயணிகள் காத்திருப்பு இடம், கட்டண கழிப்பிடம், இலவச கழிப்பிடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, ஓட்டுநர், நடத்துநர் ஓய்வு அறை, நேரம் காப்பாளர் அறை உள்ளிட்டவை இடம்பெறும்.

வெள்ளலூர் பேரூராட்சி பகுதியில் நீண்ட கால கோரிக்கையாக இருந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் ரூ.50 லட்சம் மதிப்பிலும், நவீன எரிவாயு தகனமேடை ரூ.1.08கோடி மதிப்பிலும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.26லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி என கடந்த 6 ஆண்டுகளில் ரூ.40 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தற்சமயம், செட்டிபாளையம், வெள்ளலூர் இணைக்கும் வகையில் 1.02 கி.மீ தூரத்திற்கு ரூ.1 கோடி மதிப்பில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர் பேசினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com