

சிவகங்கை:
சிவகங்கையை அடுத்த கொல்லங்குடியில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நிகழ்ச்சி கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் முன்னிலை வகித்தார்.
அதன் பின்னர் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:-
தமிழக அரசின் திட்டங்கள் கிராமப் பகுதிகளில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்துத்துறை அலுவலர்களும் கிராமப் பகுதிக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக இந்த குறைதீர் முகாமில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாகவும், முதியோர் உதவித்தொகை கேட்டும் அதிக அளவில் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கண்மாய் மடைகளை சீரமைக்க வேண்டும் என்றால் உடனடியாக இது குறித்து தகவல் தெரிவித்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, காளையார்கோவில் தாசில்தார் பாலகுரு, ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் வக்கீல் ராஜா, ஆர்.எம்.எல் மாரி, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சசிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோதாயுமானவன் நன்றி கூறினார்.
முன்னதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கொல்லங்குடியில் உள்ள தொடக்கப் பள்ளி கூடத்தை அமைச்சர் பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கிருந்த மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் சரியான நேரத்தில் வகுப்புகளுக்கு வருகிறார்களா என்றும் சத்துணவு சரியாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.