

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் நல்லகுட்லஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் வெங்கடேசன் (வயது 22). இவர் பழைய தர்மபுரி பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது குன்செட்டிஅள்ளி என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த ஒரு மினிலாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் பலத்த காயம் அடைந்தார்.
உடனே அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த மதிகோண்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.