ஆவின் பால் கலப்படத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்: பால்முகவர்கள் சங்கம் கோரிக்கை

கலப்பட பால் விவகாரத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதால், ஆவின் பால் கலப்படத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று பால்முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆவின் பால் கலப்படத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்: பால்முகவர்கள் சங்கம் கோரிக்கை
Published on

சென்னை:

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ஆவின் நிறுவனத்தில் மொத்த விநியோகஸ்தர்கள் முறையே இல்லை” தனியார் பால் நிறுவனங்களில்தான் மொத்த விநியோகஸ்தர் முறை பின்பற்றப்படுவதாக தவறான தகவலை தெரிவித்து முழுப் பூசணிக்காயை ஒரு தட்டு சோற்றில் மறைக்க முயற்சி செய்திருக்கிறார்.

அதுமட்டுமன்றி தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன என பொத்தாம் பொதுவாக பேசியவர் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் ஒரு சில தனியார் நிறுவனங்கள் தான் பாலில் ரசாயனம் கலப்படம் செய்கின்றன எனவும் கூறி உள்ளார்.

எங்களுக்கு தெரிந்தவரை ஆவின் நிறுவனத்தில் தான் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் சோயா பவுடர், ஜவ்வரிசி ஆகியவற்றை ஆவின் பாலில் கலப்படம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் பால் வயல்வெளிகளில் கொட்டி அழிக்கப்பட்டதும், மற்றொரு முறை வேலூர் மாவட்டத்தில் ஆவின் பாலில் கேஸ்ட்ரிக் சோடா கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதும் ஊடகங்களில் செய்தியாக வெளி வந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஆவின் பால் ஏற்றி வரும் டேங்கர் லாரிகளில் இருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை எடுத்து விட்டு அதற்கு பதில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்ததை பொதுமக்கள் அனைவரும் நன்கறிவார்கள்.

இப்படி பல்வேறு கால கட்டங்களில் ஆவின் நிறுவனத்தில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தான் உறுதி செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த சூழ்நிலையில் தனியார் பால் நிறுவனங்களின் கலப்பட பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வரும் என்கிற உண்மை தெரிந்திருந்தும் அமைச்சர் அந்நிறுவனங்களின் பெயரை வெளிப்படையாக அறிவித்து, அந்நிறுவனங்களின் பாலினை பொதுமக்கள் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதோடு, பேராபத்துகளில் இருந்து பொதுமக்களை காத்திட முயற்சி செய்யாமல் எச்சரிக்கை செய்கிறேன் என்கிற பெயரில் தேவையற்ற அச்சத்தையும், பீதியையும் மட்டுமே மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார்.

ஒருவேளை கலப்பட பாலை குடித்து குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என பொதுமக்களின் உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமானால் “மக்களைக் காப்பது தான் அரசின் பணி” என்பதை மறந்து அமைதி காத்த பால்வளத்துறை அமைச்சரே அனைத்து பாதிப்புகளுக்கும் முழு பொறுப்பவார்.

அமைச்சர் கூற்றுப்படி 90 நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் பயன்படுத்தும் பாலில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுகிறது என்றால் அதே வகையான பாலினை ஆவின் நிறுவனமும் உற்பத்தி செய்கிறது. அப்படியானால் ஆவின் நிறுவனமும் பாலில் கலப்படம் செய்கிறது என்பது உண்மை தானே? எனவே தனியார் பால் நிறுவனங்களின் பாலின் தரத்தினை ஆய்வுக்குட்படுத்தும் போது ஆவின் நிறுவனத்தின் பாலின் தரத்தினை ஆய்வுக்குட்படுத்தி அதனை ஒளிவு மறைவின்றி பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதற்கு தமிழக அரசும், ஆவின் நிறுவனமும் தயாரா? என்பதை அமைச்சர் தெளிவுபடுத்திட வேண்டும்.

தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் தனியார் பால் நிறுவனங்களின் பால் மாதிரிகள் புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு தரக்கட்டுப்பாட்டு பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாக ஆணித்தரமாக தெரிவித்து வந்தார்.

தற்போது அந்த மாதிரி பாலின் மாதிரிகள் தமிழகத்தில் இருந்து எங்களுக்கு வரவில்லை என அந்த ஆய்வகத்தின் இயக்குனர் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் அங்கே பாலின் மாதிரிகளை ஆய்விற்கு வாங்க மறுத்ததாக தெரிவித்தது மட்டுமின்றி அரசு அதிகாரிகள் மீதும், தனியார் பால் நிறுவனங்கள் மீதும் பழியை போட்டு தான் தப்பித்துக் கொள்கின்ற வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இப்படி முன்னுக்குப்பின் முரணாக பால் வளத்துறை அமைச்சர் பேசி வருவதில் இருந்து அவர் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மீது சுமத்தி, பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

எனவே தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தனியார் பாலில் ரசாயனம் கலப்படம் தொடர்பான பால்வளத்துறை அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாகவும், பாலில் கலப்படம் தடுப்பதற்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், தற்போது பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தையும், பீதியையும் போக்கிடும் வண்ணம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அவற்றை பொதுமக்கள் மத்தியில் தெளிவுபடுத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com