

சின்னாளபட்டி:
திண்டுக்கல் அருகே கோழிக்காக நடந்த சண்டையில் பால் வியாபாரியை அவரது தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திண்டுக்கல் அருகே வெள்ளோடு ஊராட்சிக்கு உட்பட்ட கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள். அவரது 2-வது மகன் முனியாண்டி (வயது 32). பால் வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர் குடும்பத்துடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார். பெருமாளின் கடைசி மகன் சந்தோஷ்குமார் (19). இவர் கட்டிட தொழிலாளி. தனது தந்தை பராமரிப்பில் இருந்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தோஷ்குமார் கோழி ஒன்றை வாங்கி, அதனை வீட்டில் வைத்திருந்தார். கடந்த 27-ந்தேதி அன்று அந்த கோழியை காணவில்லை. இதனால் கோழியை வீட்டிலும், அக்கம்பக்கத்திலும் சந்தோஷ்குமார் தேடியுள்ளார். ஆனால் அவரது கோழி கிடைக்கவில்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, அந்த கோழியை அவரது அண்ணன் முனியாண்டி தூக்கிச் சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை சந்தோஷ்குமார், அண்ணன் முனியாண்டி வீட்டிற்கு சென்று தனது கோழியை எடுத்து சென்றது குறித்து கேட்டு தகராறு செய்தார். அப்போது 2 பேருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் முனியாண்டி, தனது தம்பியை கல்லால் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முனியாண்டியை சரமாரியாக குத்தினார். அப்போது அவரது வயிற்றில் இருந்து குடல் சரிந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் 2 பேரின் சண்டையை விலக்கிவிட்டனர். பின்னர் சண்டையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய முனியாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முனியாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தார்.
கோழிக்காக நடந்த சண்டையில் அண்ணனை தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.