இந்து தலைவர்களை கொல்ல பயங்கரவாதிகள் சதி- நாகர்கோவில், திருப்பூரில் சோதனை

தமிழகத்தில் 4 பேர் கொண்ட கும்பல் இந்து அமைப்பு பிரமுகர்களுக்கு குறி வைத்து அவர்களை பின் தொடர்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் சதி செயலில் ஈடுபட திட்டமிட்டு இருக்கலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பயங்கரவாதிகளின் ஊடுருவலை தொடர்ந்து திருப்பூரில் போலீசார் வாகன சோதனை.
பயங்கரவாதிகளின் ஊடுருவலை தொடர்ந்து திருப்பூரில் போலீசார் வாகன சோதனை.
Published on

பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் 4 பேர் கொண்ட கும்பல் இந்து அமைப்பு பிரமுகர்களுக்கு குறி வைத்து அவர்களை பின் தொடர்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் சதி செயலில் ஈடுபட திட்டமிட்டு இருக்கலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அவர்கள் காஜா மொய்தீன், அப்துல் சலீம், சையத் அலி நவாஸ், அப்துல் சமர் எனவும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் 4 பேரும் சேலத்தில் இருந்து கோவை வந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் வலம் வருவதாக கூறப்படும் வாகன எண் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட வாரியாக போலீஸ் கமி‌ஷனர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து உளவுத்துறை டி.ஐ.ஜி.யின் எச்சரிக்கை கடிதத்தை தொடர்ந்து கோவையில் இந்து இயக்க பிரமுகர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அவர்களது வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட இந்து இயக்க தலைவர்கள் 30-க்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கோவை ரெயில் நிலையம், விமான நிலையத்திலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து கோவை வழியாக சென்ற அனைத்து ரெயில்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ரெயில்வே டி.எஸ்.பி. (பொறுப்பு) பாபு தலைமையில் சோதனை நடைபெற்றது. ஒவ்வொரு பெட்டியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்து கோவில்கள், மசூதி, கிறிஸ்தவ தேவாலயங்களிலும், முக்கிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகளிலும் 4 பேர் கும்பல் வரும் வாகனங்களின் எண் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம், ஊத்துக்குளி சாலை மண்ணரை, வீர பாண்டி, அவினாசி, தாராபுரம், பல்லடம் சாலை உள்ளிட்ட 12 போலீஸ் சோதனை சாவடிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் ரெயில் நிலையத்திலும் தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். திருப்பூரில் லாட்ஜுகள், தங்கும் விடுதிகள் மற்றும் முக்கிய இடங்களிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து உளவுத்துறை போலீசாரிடம் கேட்ட போது, உளவுத்துறை தெரிவித்த காரின் எண்ணை வைத்து கடந்த 2 நாட்களாக போலீஸ் சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை மற்றும் ரோந்து அதிகரிக்கப்பட்டு உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், தங்கும் விடுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, வேலூர் மாவட்டங்களில் இந்து இயக்க தலைவர்களை கொல்வதற்கு முயன்றதாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கைதான குற்றவாளிகள் பலரும் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ளனர். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த கைதிகள், அதன் பிறகு போலீஸ் நிலையங்களுக்கு சென்று ஆஜராகாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து இயக்க மூத்த தலைவரை தாக்கிய வழக்கில் கைதான 2 பேர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர். அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திடாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து உளவுத்துறையின் உத்தரவுப்படி குமரி மாவட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் குற்றவாளிகள் பதுங்கி இருக்கும் இடங்கள் என சந்தேகப்பட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில், குளச்சல், குழித்துறை, மார்த்தாண்டம் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜூகள், தங்கும் விடுதிகளிலும் சோதனை நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com