

மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டை சேர்ந்த பெல்-412 ரக ஹெலிகாப்டர் கடந்த வெள்ளிக்கிழமையன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் திடீரென காணாமல் போனது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.
அப்போது மெக்சிகோவின் துராங்கோ மாகாணத்தில் உள்ள எல் சால்டோ நகரம் அருகேயுள்ள மலைப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த வீரர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஹெலிகாப்டரின் பாகங்களையும், பலியாகி விட்டதாக அஞ்சப்படுகிற 7 வீரர்களின் உடல்களையும் தேடுகிற பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதின் பின்னணி என்ன என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.