மெட்ரோ ரெயில் சுரங்க பாதை பணி: வீட்டில் ரசாயன கலவை வெளியேறியதால் பரபரப்பு

வண்ணாரப்பேட்டை பகுதியில் மெட்ரோ சுரங்கப் பாதை பணி நடைபெற்று வரும் பகுதியில் ஒரு வீட்டு வாசலில் தரையை பெயர்த்தபடி ரசாயன கலவை வெளியேறியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மெட்ரோ ரெயில் சுரங்க பாதை பணி: வீட்டில் ரசாயன கலவை வெளியேறியதால் பரபரப்பு
Published on

ராயபுரம்:

சென்னை நகரில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. இதில் விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை உயர்மட்ட பாதையில் ரெயில் இயக்கப்படுகிறது.

மேலும் திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்கா வரை சுரங்கப் பாதையில் ரெயில் ஓடி வருகிறது.

விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை முதல் வழி தடத்தில் செயல்படுத்தப்படும் பணியை திருவொற்றியூர் விம்கோ நகரை விரிவாக்கம் செய்து அதற்கான பணியும் நடந்து வருகிறது.

வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் மெட்ரோ ரெயில் சேவை உள்ளது. இதில் பழைய வண்ணாரப்பேட்டை - கொருக்குப்பேட்டை வரை 1 கிலோ மீட்டரில் சுரங்கப் பாதை பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மேற்கு கல்லறை சாலையில் உள்ள ஜாகீர்உசேன் என்பவர் வீட்டு வாசலில் திடீரென்று தரையை பெயர்த்தபடி ரசாயன கலவை வெளியேறியது. அது ரோடு முழுவதும் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.

பயங்கர சத்தத்துடன் வெளியேறியதால் அந்த வீட்டில் குடியிருந்த மும்தாஜ் என்ற பெண் வெளியே வந்து பார்த்தார். ரசாயன கலவையை பார்த்ததும் அவர் அதிர்ச்சியில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனே பொதுமக்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ரசாயன கலவை வெளியேறுவது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன.

உடனே அதிகாரிகள் விரைந்து வந்தனர். 30 பேரல்களில் ரசாயன கலவைகளை அகற்றினர். இப்பணியில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. காலை 9 மணி அளவில் ரசாயன கலவை முழுமையாக அகற்றப்பட்டது.

கடந்த ஏப்ரல் 20-ந்தேதி அப்பகுதியில் உள்ள ஷேக் மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு வீட்டில் இதேபோல் ரசாயன கலவை வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 2-வது முறையாக இச்சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறுகையில், “மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பகுதியில் உள்ள வீடுகளில் எங்கெல்லாம் போர் அமைக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை முழுமையாக எங்களிடம் தெரிவித்தால் நாங்கள் மாற்று ஏற்பாடு செய்து பணிகளை செய்வோம்.

ஆனால் பொதுமக்கள் அதன் விவரங்களை முழுமையாக தரவில்லை. இதனால் போர் அமைக்கப்பட்ட பகுதியில் இருந்து சிமெண்ட் ரசாயன கலவை வெளியேறுகிறது. இந்த கலவையால் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே பொது மக்கள் அச்சப்பட வேண்டாம்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்ரோ ரெயில் நிலைய பணியால் அண்ணா சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com