

சென்னை:
சென்னையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவது தொடர் கதையாகவே உள்ளது. பரபரப்பான சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வதை அடிக்கடி காண முடியும்.
குறிப்பிட்ட இடத்தில் இருந்து இன்னொரு இடத்தை இலக்காக வைத்து இளைஞர்கள் பலர் மெரினா கடற்கரை சாலை, அண்ணா சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பந்தயம் கட்டி பைக் ரேசில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் உயிரிழப்புகள் நடந்துள்ளன. பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்களும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களும் பல முறை விபத்தில் சிக்கியுள்ளனர்.
பைக் ரேசின் ஆபத்தை உணர்ந்து போலீசார் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் இளைஞர்களை வழிமறித்து வழக்கும் போட்டு வருகின்றனர்.
ஆனால், சென்னையில் பைக் ரேசை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ச்சியாக இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று அதிகாலை 6 மணி அளவில் மெரினாவில் பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர் உயிரிழந்தார். அவரது பெயர் சாந்தகுமார் (வயது 19). பட்டாளத்தைச் சேர்ந்த இவர் நண்பர் பாலாஜியுடன் மோட்டார் சைக்கிளில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையை நோக்கி சென்றுகொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை பாலாஜி ஓட்டிச்சென்றார். சாந்தகுமார் பின்னால் அமர்ந்திருந்தார். இவர்களுடன் மேலும் 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேரும் சென்றனர்.
மெரினா கடற்கரையில் 5 மோட்டார் சைக்கிள்களும் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தன. நேராக நேதாஜி சுபாஷ் சிலை அருகே சென்றபோது பாலாஜி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக சென்ற மாநகர பஸ் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த சாந்தகுமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பாலாஜி படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இன்று அதிகாலை 4 மணி அளவில் மெரினாவில் ஒரே நேரத்தில் 50 மோட்டார் சைக்கிள்களில் சென்று இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். ரேஸ் கார் ஒன்றும் சீறிப் பாய்ந்தது. இதனைப் பார்த்து கடற்கரைக்கு நடைப் பயிற்சிக்கு சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மெரினாவில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடும் சாகச காட்சிகள் பதிவாகி உள்ளது. மோட்டார் சைக்கிளில் முன் பக்க சக்கரத்தை மேலே தூக்கிய படி நீண்ட தூரம் ஒரு இளைஞர் சாகசம் செய்யும் காட்சி பதிவாகி உள்ளது.
அதேபோல தீப்பொறி பறக்க இளைஞர்கள் பலரும் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளனர். அந்த காட்சிகளும் பதிவாகி உள்ளது. அதனை வைத்து பைக் ரேசில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.
நேற்று இரவில் தொடங்கி இன்று காலை வரை தொடர்ச்சியாக நடந்த பைக் ரேசில் 8 விபத்துகளும் நடந்துள்ளன.
மெரினாவில் நடந்தது போன்று அபிராமபுரம், கோட்டூர்புரம் பகுதிகளிலும் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். இரவு 12 மணிக்கு மேல் நடந்த இந்த பைக் ரேசால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சாலைகளில் தடுப்புகளை வைத்து 4 இளைஞர்களையும் மடக்கி பிடித்தனர். அவர்களது மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
4 பேரின் பெற்றோர்களையும் வரவழைத்து அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினர். கடந்த 29-ந்தேதி சென்னை மெரினாவில் மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டதாக 11 இளைஞர்கள் பிடிபட்டனர்.
இவர்களோடு சேர்த்து 3 நாட்களில் 15 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 பேரின் லைசென்சை ரத்து செய்யவும் போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
இதுபோன்று இதற்கு முன்னரும் பலமுறை பைக் ரேசில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இருப்பினும் பைக் ரேஸ் கட்டுக்குள் வரவில்லை.
சென்னையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பைக் ரேசை கட்டுப்படுத்த போலீசார் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
போக்குவரத்து போலீசார் பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்கள் மீது தயவு தாட்சணியம் இன்றி கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அப்போது தான் பயமுறுத்தும் பைக் ரேசை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.
பைக் ரேஸ் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு ரேஸ் பைக்குகளை வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் இரவு நேரங்களில் எங்கு செல்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும். பெற்றோர்கள் ஒத்துழைத்தால் மட்டுமே பைக் ரேசை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றார்.