

கொடைக்கானல்:
கொடைக்கானலில் விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த சில மாதங்களுக்கு முன் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து 400-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டன. விதி மீறல் கட்டிடங்களை முறைபடுத்த வணிகர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர்.
இதனையொட்டி தாசில்தார் வில்சன் தேவதாஸ், டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இதில் சுமூக முடிவு எட்டப் படாததால் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி கொடைக்கானலில் இன்று 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஓட்டல், டீக்கடைகள் கூட திறக்கப்படவில்லை. இதனால் பல முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.