

கள்ளக்குறிச்சி:
கத்திரி வெயில் முடிந்தபோதிலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. தினமும் சதத்தை கடந்து வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். உடல் உஷ்ணத்தை தணிக்க பொதுமக்கள், ஆங்காங்கே உள்ள கடைகளில் பழ ஜூஸ், இளநீர் உள்ளிட்டவற்றை வாங்கி குடிக்கிறார்கள்.
கோடைகாலத்தில் ஜூஸ், இளநீர் உள்ளிட்டவைகள் விற்பனை செய்வதற்காக சாலையோரத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் முளைத்துள்ளதை காணலாம். பழ ஜூஸ் தயார் செய்வதற்கு மின்சாரமும், மிக்சியும் தேவைப்படும். இதனால் அவை நிரந்தர கடைகளில் மட்டும் வைத்திருப்பார்கள். தற்காலிக பழ ஜூஸ் கடைகளில் ஜெனரேட்டரை இயக்கி பழஜூஸ் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் உள்ள கச்சிராயப்பாளையம் சாலையில் வியாபாரி ஒருவர் மொபட் என்ஜின் மூலம் மிக்சியை இயக்கி பழ ஜூஸ் தயாரித்து விற்பனை செய்கிறார். அது பற்றிய விவரம் வருமாறு:-
தென்செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவர் கோடைகாலத்தில் நன்னாரி சர்பத், சாத்துக்குடி ஜூஸ் ஆகியவற்றை மட்டும் விற்பனை செய்து வந்தார். இதில் குறைந்த அளவே வருமானம் கிடைத்தது.
வியாபாரத்தை அதிகரிக்கவும், வருமானத்தை பெருக்கவும் அனைத்து வகை பழ ஜூஸ்களையும் தயார் செய்து விற்பனை செய்ய அவர் முடிவு செய்தார். ஆனால் அவரிடம் அதற்கு தேவையான போதிய நிதி இல்லை. இதனால் வீட்டில் இருந்த பழைய மொபட் என்ஜினை தனியாக கழற்றி, ஜெனரேட்டர் போன்று வடிவமைத்துள்ளார். மொபட்டை இயக்க எரிபொருளாக பெட்ரோலை பயன்படுத்துகிறார். அந்த மொபட்டை இயக்கி மிக்சியை ஓடசெய்து ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட அனைத்து வகையான பழ ஜூஸ்களையும் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இது குறித்து துரைசாமி கூறுகையில், மொபட் என்ஜின் மூலம் பழ ஜூஸ் தயாரித்து விற்பனை செய்வதால் நல்ல வருவாய் கிடைக்கிறது. இது புது அனுபவமாக உள்ளது என்றார்.