

சென்னை:
புரசைவாக்கத்தில் அமைய உள்ள மெட்ரோ ரெயில் பாதை திட்டத்தை மாற்றக்கோரி இன்று வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேரு பூங்கா வரை சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து தற்போது நடைபெற்று வருகிறது.
மெட்ரோ ரெயிலுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு ஏற்பட்டுள்ளதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் பாதையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி மாதவரம்-சோழிங்கநல்லூர் மற்றும் நெற்குன்றம்- விவேகானந்தர் இல்லம் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
அதில் மாதவரம்-சிறுசேரிக்கு அமைக்கப்பட உள்ள வழித்தடப்பாதை பெரம்பூர்-அயனாவரம், ஓட்டேரி-புரசைவாக்கம் வழியாக கெல்லீஸ் நோக்கி செல்லும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தட பாதையால் புரசைவாக்கம் பகுதியை சுற்றி உள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே அந்த வழித்தட பாதையை மாற்றக்கோரி புரசைவாக்கம்-வேப்பேரி வியாபாரிகள் சங்கத்தினர் இன்று முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் புரசைவாக்கம் வேப்பேரியை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் இன்று மூடப்பட்டிருந்தன.
2-வது மெட்ரோ ரெயில் திட்டப்பாதை புரசைவாக்கம் வழியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியை சார்ந்த வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
மெட்ரோ ரெயில் திட்டத்தால் கடைகள் அகற்றப்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு அடையும்.
எனவே மெட்ரோ ரெயில் திட்டப்பாதையை அயனாவரம், ஓட்டேரி வழியாக மாற்றி அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வியாபாரிகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு வியாபாரிகள் கூறினார்கள். #tamilnews