ஓ.பன்னீர்செல்வம் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் வாகனம் மோதி வியாபாரி பலி

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குமரி மாவட்டத்திற்கு வெள்ள சேதங்களை பார்வையிட வந்தபோது அவருடன் சென்ற போலீஸ் பாதுகாப்பு வாகனம் மோதியதில் படுகாயடைந்த துணி வியாபாரி இன்று பலியானார்.
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார், மீனாட்சிபுரம் தோப்பு வணிகர் தெருவை சேர்ந்தவர் சங்கரன் (வயது 57). துணி வியாபாரி.

இவர் கடந்த 3-ந் தேதி தனது மொபட்டில் கன்னியாகுமரிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மாலை வீடு திரும்பி கொண்டிருந்தார். பொற்றையடி அருகே இலங்காமணிபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த போலீஸ் வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் சங்கரன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சங்கரன் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரன் மீது மோதி விட்டு சென்ற வாகனம் எது? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குமரி மாவட்டத்திற்கு வெள்ள சேதங்களை பார்வையிட வந்தபோது அவருடன் சென்ற போலீஸ் பாதுகாப்பு வாகனம் மோதியது தெரிய வந்துள்ளது. அந்த போலீஸ் வாகனம் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com