

பொங்கலூர்:
பொங்கலூர் அருகே உள்ள கொடுவாய், ஈஸ்வரன்கோவில் வீதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் இளங்கோ(வயது22). இவர் கொடுவாயில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். மீன் வியாபாரம் தொடர்பாக அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கம். அந்த வகையில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள சமயத்தில் கூட இளங்கோ வெளியூர் சென்று வந்துள்ளார். இந்த தகவலை இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த பத்மநாபன் என்பவரது மகன் கவுதம்(28) கலெக்டர் அலுவலகம் மற்றும் சுகாதாரத்துறை ஆகியவற்றிற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளங்கோ நேற்று முன்தினம் இரவு கவுதம் வீட்டிற்கு மீன் வெட்டும் கத்தியுடன் சென்றுள்ளார். அப்போது கவுதம் அவரது தாயாருடன் வீட்டின் முன்பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அங்கு சென்ற இளங்கோ மீன் வெட்டும் கத்தியால் கவுதமின் கழுத்து மற்றும் இடது தாடை ஆகிய பகுதியில் வெட்டியுள்ளார். இதனை கண்ட அதிர்ச்சியில் கவுதமின் தாயார் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கவுதமை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளங்கோவை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூரில் உள்ள ஜெயிலில் அடைத்தனர்.