மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என மாநிலங்களவையில் அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களும் இன்று வலியுறுத்தினர். #WomensDay #Parliament
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்
Published on

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா பாராளுமன்றத்தில் இன்றும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த ஆண்டாவது நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் சர்வதேச மகளிர் தினமான இன்று பாராளுமன்றத்தில் இடஒதுக்கீட்டு மசோதாவிற்காக மீண்டும் அழுத்தம் கொடுத்தனர். மாநிலங்களவையில் இன்று மகளிர் தின சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில், அம்பிகா சோனி, ரேணுகா சவுத்ரி, குமாரி செல்ஜா, கனிமொழி, ரூபா கங்குலி, மைத்ரேயன், டி.கே.ரங்கராஜன், திருச்சி சிவா, சுப்பிரமணியன் சுவாமி  உள்ளிட்ட எம்.பி.க்கள் பேசினர். அப்போது, கட்சி வேறுபாடுகளைக் கடந்து இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். அத்துடன், பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து வேதனை தெரிவித்தனர்.


உறுப்பினர்கள் பேசி முடித்ததும் விவாதத்தை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் முடித்து வைத்து உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது:-

பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவதற்கு நான் எப்போதும் ஆதரவாக இருந்துள்ளேன். எனினும், இடஒதுக்கீடுகள் இல்லாமல்கூட பெண்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். நாம் பெண் ஜனாதிபதி, பெண் பிரதமர், பெண் சபாநாயகர், பெண் முதல்வர்களைப் பெற்றுள்ளோம். கட்சிகளின் தலைமைப் பொறுப்பிலும் பெண்கள் உள்ளனர்.  

இந்த வளர்ச்சி மகிழ்ச்சி அளித்தபோதிலும், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நடைபெறுவது நமக்கு வெட்கக்கேடு. எனவே, பெண்களுக்கு எதிரான மனப்போக்கை மாற்ற வேண்டும் என்று சபதம் எடுக்க வேண்டிய நேரம் இது. இது ஒரு இயக்கமாகவும் பிரச்சாரமாகவும் முன்னெடுத்து கொண்டு செல்லப்பட வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com