மேகாலயாவில் தொங்கு சட்டசபை - மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையுமா?

மேகாலயா சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற தவறிய காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இங்கு கூட்டணி அரசு அமையலாம் என தெரிகிறது.
மேகாலயாவில் தொங்கு சட்டசபை - மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையுமா?
Published on

ஷில்லாங்:

60 இடங்களை கொண்ட மேகாலயா சட்டசபைக்கு கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து இந்த மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

முதல் மந்திரி முகுல் சங்மா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். அம்பாதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பகுல் சந்திரா ஹஜோங்கை விட 8,104 வாக்குகள் வித்தியாசத்திலும், சாங்சாக் தொகுதியில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ஷிராவை விட 1,830 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளார். 

மாலை 5 மணி நிலவரப்படி, தேசிய மக்கள் கட்சி 18 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், ஐக்கிய குடியரசு கட்சி 6 இடங்களிலும், மக்கள் குடியரசு முன்னணி 4 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும், பா.ஜ.க. 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இங்கு ஆட்சியை கைப்பற்ற 31 இடங்களை பெற்றாக வேண்டும் என்னும் நிலையில், அதிகமான இடங்களை பிடித்துள்ள காங்கிரஸ் ஆட்சி அமைக்க இன்னும் 11 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இந்த ஆதரவை சிறிய கட்சி அல்லது சுயேட்சை எம்.எல்.ஏ.க்களிடம் காங்கிரஸ் கேட்டுப் பெற்று அரசு அமைத்தாலும், அந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதற்கிடையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல் மந்திரி முகுல் சங்மா, ’வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. ஆனால், நான் இன்னும் சில முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். காங்கிரசால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியமா என்ற உங்கள் கேள்விக்கு நான் இப்போது பதில் அளிப்பதற்கு இயலாது’ என தெரிவித்துள்ளார்.

எனவே, தற்போது அமையவுள்ள சட்டசபை தொங்கு சட்டசபையாக இருக்கும். கூட்டணி கட்சிகள் திடீரென்று காலை வாரி விட்டால் மீண்டும் பொது தேர்தலை மேகாலயா சட்டசபை சந்திக்க நேரிடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

#tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com