

புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அமர்நாத் யாத்திரை, மச்சாயில் மாதா யாத்திரை உள்ளிட்ட யாத்திரைகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும், ஜம்மு காஷ்மீரில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்தார்.
இதற்கிடையே, காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என 7 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதையடுத்து அங்குபதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் காஷ்மீர் நிலவரம் குறித்த அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.