மீன்சுருட்டி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி மரணம்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 58). விவசாயி. இவர் கடந்த 22-ந் தேதி மாலை தனது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் ஏறி மாங்காய் பறித்தபோது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது உறவினர் ராசு (38) கொடுத்த புகாரின் பேரில், மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வளையாபதி வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

