

சென்னை:
கோவை மாவட்டம், செட்டிபாளையத்தைச் சேர்ந்த ராமசாமி. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
‘கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக், பாலித்தீன், மின்னணு ரசாயனக் கழிவுகள் கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகாவில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து நான் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த இடத்தில் கழிவுகளை கொட்ட மதுக்கரை வட்டாட்சியர் கடந்த மார்ச் 10-ந்தேதி தடை விதித்து உத்தரவிட்டார். ஆனால் ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த ஐகோர்ட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், கோவை மாவட்ட கலெக்டரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோவை கலெக்டர் ஹரிகரன் நேரில் ஆஜராகி, ‘மதுக்கரையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை எல்லாம் அப்புறப்படுத்தி, அவற்றை கேரளாவுக்கே திருப்பி அனுப்பி வைத்து விட்டோம்’ என்றார்.
இதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மருத்துவ கழிவுகளை கேரளாவுக்கு திருப்பி அனுப்பவில்லை. கோவை மாவட்ட எல்லையில் மற்றொரு இடத்தில் கொட்டி வைத்துள்ளனர் என்றார்.
இதையடுத்து நீதிபதி, ‘மருத்துவ கழிவுகளை கேரளாவுக்கு திருப்பி அனுப்பி விட்டதாக கோவை மாவட்ட கலெக்டர் கூறுகிறார். எனவே, அவர் இதுகுறித்து பிரமாண மனுவை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.