மாடு குறுக்கே வந்ததால் விபத்து: தஞ்சை மருத்துவக்கல்லூரி ஊழியர் பலி

தஞ்சை பூதலூர் அருகே மாடு குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற தஞ்சை மருத்துவக்கல்லூரி ஊழியர் பலியானார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வல்லம்:

தஞ்சையை அடுத்த பூதலூர் அருகே உள்ள பழைய கரியப்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 38). இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த பரிசோதனை பிரிவில் பணி புரிந்து வந்துள்ளார்.

திருமணமான இவர் தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று காலை உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இளையராஜா, பூதலூர் அருகே உள்ள பழைய கரியப்பட்டிக்கு சென்றார்.

இதன்பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவு பணி இருந்ததால் இளையராஜா தஞ்சைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

வல்லத்தில் இருந்து தஞ்சை செல்லும் புறவழிச்சாலை அருகே இளையராஜா மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வல்லம் ரெட்டிப்பாளையம் பண்டாரிநாயக்கன் தெருவை சேர்ந்த திருமுருகன் மனைவி லட்சுமி (வயது 42) என்பவர் மாடுகளை ஓட்டிக்கொண்டு புறவழிச்சாலையை கடந்து வந்தார்.

அப்போது திடீரென மாடு மீதும் லட்சுமியின் மீதும் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த இளையராஜாவும், லட்சுமியும் சாலையில் விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லட்சுமி படுகாயமடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் காயமடைந்த லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் இறந்த இளையராஜாவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com