சபரிமலை அருகே பத்திரிகையாளர் வாகனம் மீது தாக்குதல் - போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி

சபரிமலை அருகே நிலக்கல், பம்பா பகுதிகளில் பத்திரிகையாளர்கள் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடியில் ஈடுபட்டு வருகின்றனர். #Sabarimalaverdict #SCverdict
சபரிமலை அருகே பத்திரிகையாளர் வாகனம் மீது தாக்குதல் - போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி
Published on

சபரிமலைக்கு பெண்கள் வருவதை தடுக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஐயப்ப பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர். சபரிமலை கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலான நிலக்கல்லில் குவிந்தனர். அங்கு சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நேற்று மாலை தொடங்கிய போராட்டம் விடிய விடிய நடந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (புதன்கிழமை) மாலை திறக்கப்பட இருக்கிறது. அப்போது பெண் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று கருதிய போராட்டக்காரர்கள், அவர்களை சபரிமலைக்குள் நுழைய விடாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இன்று மாலை 5 மணியளவில் கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், அங்குள்ள நிலவரம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் நிலக்கல், பம்பை மற்றும் சபரிமலை கோவில் பகுதியில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் அவ்வழியாக ஒரு பெண் பத்திரிகையாளர் வந்த காரை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்து திரும்பிச் செல்லும்படி எச்சரித்ததுடன் அவர் வந்த காரின் மீதும் தாக்குதல் நடத்தினர்.

நிலக்கல் பகுதியில் இந்தியா டுடே பத்திரைகையின் பெண் நிருபர் மவுசமி சிங் என்பவரும் போராட்டகாரர்களால் தாக்கப்பட்டார். அவரை மீட்ட போலீசார் பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com